சென்னை: ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட குறைவாக இருப்பதாக ரேஷன் கடை பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு உரிய எடையில் அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்களிடம் கேட்டபோது, தங்களுக்கு வரும் அரிசி மூட்டைகளே எடை குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
50 கிலோ எடை கொண்டதாக வரும் அரிசி மூட்டைகளில் எடை குறைவாக இருப்பதுடன், அரிசியின் தரமும் குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல தரமான அரிசி வெளிச்சந்தைக்கு திருப்பி விடப்பட்டு, தரம் குறைந்த அல்லது பழைய அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுவதாகவும், அதுவும் குறைந்த எடையில் வழங்கப்படுவதாகவும் பல ஆண்டுகளாக புகார்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நெல் கொள்முதல் முதல் அரவை, கிடங்கு, போக்குவரத்து மற்றும் ரேஷன் கடை வரை முழு விநியோகச் சங்கிலியையும் அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
