புதுடெல்லி: மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேகமலை பகுதியில் 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி புலிகள் காப்பகப் பகுதிக்குள் வருவதால், ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் அகற்ற ஏற்கனவே உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதல் கால அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள இலவம் பஞ்சு தோட்டங்களை அகற்ற வேண்டும் என்றும், பயிரிடப்பட்டுள்ள நிலங்களை முழுமையாக கையகப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள கட்டடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் துணை ராணுவப் படையினரை அனுப்ப நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
