விசாகப்பட்டினம்: வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியர் நடத்தியதாகக் கூறப்படும் கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு 6 வயது LKG மாணவன் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம் ஒன் டவுன் பகுதியில் உள்ள லிட்டில் கார்டன்ஸ் என்ற தனியார் பள்ளியில் பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன் LKG படித்து வந்தான். வீட்டுப்பாடத்தை முடிக்காமல் பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆசிரியர் சிறுவனை மற்ற மாணவர்கள் முன்னிலையில் கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுவனின் சட்டையைக் கழற்ற முயன்றதுடன், சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து கன்னத்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுவன் வகுப்பறையிலேயே அழுதுகொண்டிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் மரணம் குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வகுப்பறையில் பதிவானதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
