புதுடில்லி: லஞ்சம் கேட்கப்படும் சம்பவங்களை பொதுவெளியில் பதிவு செய்யும் வகையில் டெல்லியைச் சேர்ந்த 20 வயது பி.டெக். மாணவர் ஆர்யன் நிஷாத் ‘Bribes.Fyi’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளார்.
கடந்த ஜூலை 2-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த இலவச தளத்தில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்பட்ட சம்பவங்கள், பணம் கொடுத்தது அல்லது லஞ்சம் கொடுக்க மறுத்தது போன்ற தகவல்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம். முக்கியமாக, புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
துறை, நகரம் மற்றும் மாநிலம் அடிப்படையில் லஞ்சப் புகார்களை பதிவு செய்யும் வசதி இதில் உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி நிலவரப்படி 258 நகரங்களில் இருந்து 646 லஞ்சப் புகார்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட புகார்களில் 37 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க மறுத்தபோதும் தங்களது பணியை முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். காவல்துறை தொடர்பாக அதிகபட்சமாக 337 புகார்களும், ஆர்டிஓ அலுவலகங்கள் மீது 88 புகார்களும், வருவாய் மற்றும் நில ஆவணங்கள் துறை மீது 69 புகார்களும் பதிவாகியுள்ளன. பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் தொடர்பாகவும் புகார்கள் இடம்பெற்றுள்ளன.
லஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக போலீசில் புகார் அளிப்பது சிறந்த வழி என்றாலும், பல்வேறு காரணங்களால் வெளிப்படையாக புகார் அளிக்க முடியாதவர்களுக்கு இந்த தளம் ஒரு மாற்று வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
