மும்பை: மும்பை விமான நிலையத்தில் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி செல்ல இருந்த இண்டிகோ விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு டெல்லி புறப்பட இருந்த இண்டிகோ 6E333 விமானத்தில் பயணம் செய்ய 55 வயதான அனுஜ் ஜெயராம் சுவர்ணா வந்திருந்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டபோது, தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், அவர் பொய்யான தகவல் அளித்தது தெரியவந்தது. இதனால் காலை 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் சுமார் 9 மணியளவில் புறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக இண்டிகோ உதவி பாதுகாப்பு மேலாளர் அளித்த புகாரின் பேரில் சஹார் போலீசார் அனுஜ் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
