டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஷேக் ஹசீனா மற்றும் உஸ்மான் ஹதியின் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளின் அதிகாரிகளும் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், ஆனால் ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பேசியது இருநாட்டு பேச்சுவார்த்தையை பாதித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா–வங்கதேசம் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.
