அமெரிக்கா: வாழ்க்கைத்துணையை தேடும் முயற்சியில் வழக்கமான டேட்டிங் செயலிகளை தவிர்த்து, கூகுள் ஃபார்ம் மூலம் ‘கணவர் விண்ணப்பம்’ உருவாக்கிய பெண்ணின் முயற்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லட் நகரைச் சேர்ந்த ஆரின் பேட்டர்சன் என்பவர், தனக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணையை தேடும் நோக்கில் 3 பக்கங்கள் கொண்ட கூகுள் ஃபார்மை உருவாக்கியுள்ளார்.

இந்த விண்ணப்பத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், திருமணத்தில் ஆர்வமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த விண்ணப்பம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், இதுவரை 241 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், 1,000 முதல் 1,500 பேர் வரை தனக்கு நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் ஆரின் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவத்தில் திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள், வாழ்க்கை முறை, வேலை, எதிர்கால திட்டங்கள், வருங்கால வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்க்கும் குணங்கள், குடும்ப வாழ்க்கை, திருமணம் மற்றும் குழந்தைகள் குறித்த விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
28 முதல் 47 வயதுக்குள் இருப்பவர், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர், திருமணத்துக்கு தயாராக இருப்பவர் ஆகியவை தனது எதிர்பார்ப்புகளில் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கல்வித் தகுதி, உடல் அமைப்பு உள்ளிட்ட சில தனிப்பட்ட எதிர்பார்ப்புகளையும் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், பின்னர் அது முறிந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக தனியாக இருப்பதாகவும் ஆரின் கூறியுள்ளார்.
டேட்டிங் செயலிகள், நேரடி சந்திப்புகள் மற்றும் நண்பர்கள் மூலம் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாழ்க்கைத்துணையை தேடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது பெற்றோரின் 44 ஆண்டுகால திருமண வாழ்க்கை நீண்டகால உறவை நோக்கி பயணிக்க தன்னை ஊக்கப்படுத்தியதாகவும் ஆரின் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வித்தியாசமான முயற்சி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பாராட்டியும், சிலர் ஆச்சரியம் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொள்வதே தனது தற்போதைய முக்கிய இலக்கு என்று ஆரின் தெரிவித்துள்ளார்.
