சென்னை: தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெருவின் பெயருடன் சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை நீதிபதி என்.ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே அரசு மற்றும் உயர் நீதிமன்றம் தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டிருந்தும், சில இடங்களில் அவை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைய வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
