புதுடில்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கோரியும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கர்நாடக அணைகளில் குறிப்பிடத்தக்க அளவு நீர் இருப்பு இருந்தும் தமிழகத்துக்கான நீர் முறையாக திறக்கப்படவில்லை என்று வாதிட்டார். இதற்கு கர்நாடக அரசு தரப்பு, ஏற்கெனவே உத்தரவிட்ட அளவைவிட அதிகமான நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், கர்நாடகாவில் தற்போது மழை நிலவரம் சாதகமாக இருப்பதால் வழக்கை ஒரு வாரத்துக்குப் பிறகு விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு உத்தரவை கர்நாடக அரசு கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
