சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 717 கடைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கடைகளின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், முதலமைச்சரின் உத்தரவுப்படி 717 கடைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிய கடைகளும் இதில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சில பகுதிகளில் செயல்படும் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
