சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், மதுரை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஆகஸ்ட் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
