திருநெல்வேலி: கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடையதாக கூறப்படும் சிறை வார்டன் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி டவுன்–குற்றாலம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை சோதனையிட்டபோது, அதில் 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முறப்பநாட்டைச் சேர்ந்த நவீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கஞ்சாவை மொத்தமாக வாங்கி சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டனாக பணியாற்றி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றியபோது, பிரபல கஞ்சா வியாபாரி எஸ்டேட் மணியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தினேஷ் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தமிழரசனுடன் இணைந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது தினேஷ் மற்றும் எஸ்டேட் மணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தமிழரசன் சிக்கியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து தமிழரசனை சஸ்பெண்ட் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
