கான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், பயிற்றுநர் மற்றும் பயிற்சி விமானி என இருவர் உயிரிழந்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த விமானப் பயிற்றுநர் சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த பயிற்சி விமானி அபிஷேக் பூஜாரி ஆகியோர் விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இருவரும் கான்பூரில் உள்ள கார்க் விமானப் பயிற்சி மையத்திலிருந்து காலை 11.30 மணியளவில் புறப்பட்டுள்ளனர். பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது காலை 11.50 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நான்கு இருக்கைகள் கொண்ட இரட்டை என்ஜின் டெக்னாம் ரக விமானமான இது, கடந்த 2023-ம் ஆண்டு பயிற்சிக்காக கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டி.ஜி.சி.ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற பகுதியை போலீசார் சுற்றிவளைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
