புதுடில்லி: கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளின் அதிகபட்ச ஒளி தீவிரத்தை குறைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதிக பிரகாசம் கொண்ட முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை பாதிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கான அதிகபட்ச ஒளி தீவிரத்தை 1.50 லட்சம் கேண்டெலாவில் இருந்து 1 லட்சம் கேண்டெலாவாக குறைக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. அதேபோல், கார்களின் முகப்பு விளக்குகளுக்கான அதிகபட்ச அளவை 2.25 லட்சம் கேண்டெலாவில் இருந்து 1.50 லட்சம் கேண்டெலாவாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், முகப்பு விளக்குகள் மற்றும் முன்புற பனி விளக்குகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை ஒளியின் நிற வெப்பநிலைக்கும் கட்டுப்பாடு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது. அதிகபட்ச நிற வெப்பநிலையை 6,500 கெல்வினாக நிர்ணயிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதிக நிற வெப்பநிலை கொண்ட விளக்குகள் எதிரே வரும் ஓட்டுநர்களுக்கு அதிக பார்வை கூச்சலை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
