வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளில் ஒன்றைக் கொண்ட வெனிசுலாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி பீப்பாய் அளவிலான உறுதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளில் பெரும் பகுதியை அமெரிக்கா கட்டுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு ஈர்க்கப்படும் என்றும், வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களும் வெனிசுலா அரசும் இணைந்து உருவாக்கும் புதிய தனியார் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் 55 சதவீதத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலையை குறைக்க உதவும் என டிரம்ப் நிர்வாகம் கூறினாலும், வெனிசுலாவின் பழைய எண்ணெய் கட்டமைப்பை சீரமைத்து உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகளும் பெரும் முதலீடும் தேவைப்படும் என்பதால் உடனடி விலை குறைப்பு சாத்தியமில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
