காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது. அடையாளம் தெரியாத உடல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்கள் பாதுகாப்பாக புதைக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளநீர் வடிந்த பின்னர், தார் போன்ற அடர்த்தியான சேற்றில் இருந்து நூற்றுக்கணக்கான உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. பல உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதுடன், வீடுகளில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்படுவதால் அவற்றை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடங்களும் நிரம்பி வருவதால், பரத்பூர் மாவட்டத்தில் பல உடல்களை ஒரே இடத்தில் புதைக்கும் நடவடிக்கையும் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு உடலுக்கும் அடையாள அட்டை மற்றும் இருப்பிட எண் வழங்கப்பட்டு, நெகிழிப் பையில் சுற்றப்படுகிறது. அதற்கு முன்பு ஒவ்வொரு உடலிலிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் உறவினர்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் உடல்களை மீட்டு முறையான இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நேபாள அதிகாரிகளுக்கு உதவ இந்தியாவில் இருந்து 19 பேர் கொண்ட சிறப்பு தடயவியல் குழு காத்மாண்டு சென்றுள்ளது.
அடையாளம் காணும் பணியை விரைவுபடுத்தும் வகையில், இறந்தவர்களின் புகைப்படங்களை பார்த்து கழுத்தணி, திருமண மோதிரம், பச்சைக்குத்து, தழும்பு உள்ளிட்ட அடையாள அம்சங்களை கவனிக்குமாறு நேபாள அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் பவர்பாயிண்ட் ஸ்லைடு ஷோக்களாகவும், நேபாள காவல்துறை இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன. காத்மாண்டுவில் உள்ள சவக்கிடங்கிற்கு வெளியேயும் உடல்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
