கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அதிகாலை மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்ததுடன், டிவி மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர்களை எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த சிலர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாகவும், மின்னணு சாதனங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில், அதிகாலை 4.30 மணியளவில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மறுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தேவையின்றி பாஜக மீது குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக 6 பேரை கொல்கத்தா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
