காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் உயிரிழந்ததாகக் கருதி குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நேபாளத்தை தாக்கிய பெருவெள்ளத்தில் 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசுவா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், அலுவலகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்துள்ளன. சேற்றுக்குள் சிக்கியவர்களை மோப்ப நாய்களின் உதவியுடன் ராணுவத்தினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். அண்மையில் ஒரே வீட்டில் 24 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காணாமல் போனவர்களை மீட்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல குடும்பங்கள் தங்களது உறவினர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதி இறுதிச்சடங்குகளை செய்து வருகின்றனர்.
திரிசூலி ஆற்றின் கரையோரத்தில் காணாமல் போனவர்களுக்காக இந்து முறைப்படி பிண்டம் வைத்து, மந்திரங்கள் ஓதி குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை நடத்திய காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
