சிவகங்கை: மானாமதுரை நகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பிலான சாலைப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்காக ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் நகராட்சி பொறியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் ஓட்டுநர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை நகராட்சி எல்லைக்குட்பட்ட 3 பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரிடம், பணிகளுக்கான ஒப்புதல் மற்றும் அடுத்தகட்ட நடைமுறைகளுக்காக ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டதாக நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் மீது புகார் எழுந்தது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
முதல் தவணையாக ரூ.2 லட்சம்
போலீசார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் பணம் ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டது. அந்தப் பணத்தை மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் பொறியாளர் பட்டுராஜனிடம் ஒப்பந்ததாரர் வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பணத்தை பெற்றதாக கூறப்படும் பட்டுராஜனை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவர் பெற்ற பணத்தை தனது வாகன ஓட்டுநர் சேதுபதியிடம் கொடுத்து வாகனத்தில் மறைத்து வைக்குமாறு கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சேதுபதியும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மானாமதுரை நகராட்சி அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சாலை ஒப்பந்தப் பணிகளுடன் தொடர்புடைய கோப்புகள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
