பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குழந்தை, மருத்துவர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
காசாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் வாகனங்கள் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜபாலியா, டெய்ர் அல் பலா உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கான் யூனிஸ் பகுதியில் உள்ள மருத்துவ வளாகத்தின் கட்டிடத்திலும் தாக்குதல் நடைபெற்றதாக காசா சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அங்கு உயிரிழப்புகளும் பலத்த காயங்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே போர் பாதிப்பால் மருத்துவ வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் போராடி வரும் நிலையில், புதிய தாக்குதல்கள் பொதுமக்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளன. சர்வதேச நாடுகள் போர் நிறுத்தம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.
