சென்னை: குறும்படம் தயாரிப்பதற்காக பணம் முதலீடு செய்யுமாறு அறிமுகமான இளைஞரிடம் வற்புறுத்தியதாகவும், பின்னர் நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படும் புகாரில் நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான வர்ஷினி வெங்கட், சில திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் இளைஞர் அறிமுகமாகியதாகவும், தொடர்ந்து அவருடன் நட்பாக பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் குறும்படம் தயாரிப்பதற்காக முதலீடு செய்யுமாறு அந்த இளைஞரிடம் வர்ஷினி வற்புறுத்தியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே ஒரு தொகையை அவர் பெற்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
நட்சத்திர ஓட்டலில் மிரட்டல்?
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அந்த இளைஞரை வரவழைத்ததாகவும், அங்கு வர்ஷினி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இளைஞரின் செல்போன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வர்ஷினி வெங்கட்டை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞரிடம் ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
