துபாய்: வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் துபாய் வருபவர்கள், அங்குள்ள வாழ்க்கைச் செலவையும் வருமானத்தையும் முழுமையாக கணக்கிட்டு முடிவெடுக்க வேண்டும் என கொல்கத்தாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராகுல் பாலா பகிர்ந்துள்ள காணொலி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
துபாயில் சமையல் கலைஞராக பணியாற்றி வரும் ராகுல் பாலா, தனது சமூக வலைதளப் பதிவில் அங்கு சாதாரண தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் செலவுகள் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவின்படி, துபாயில் அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக அன்றாட தேவைகளை சமாளிப்பதுடன், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கும் பணம் அனுப்புவது சில தொழிலாளர்களுக்கு சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் என்ற கனவு நிறைவேறியபோதும், அங்கு வாழ்வதன் மூலம் இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் சில அம்சங்களின் மதிப்பை தான் அதிகமாக உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு உணவுக்கு ரூ.260?
துபாயில் சாதாரண உணவுக்கே குறைந்தபட்சம் 10 திர்ஹாம் வரை செலவாகலாம் என்றும், இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.260 ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், துபாயில் வேலைக்குச் செல்லும் அனைவரின் வருமானம், தங்குமிடம், உணவு மற்றும் பிற செலவுகள் ஒரே மாதிரி இருக்காது. எனவே தனிப்பட்ட சூழ்நிலையை கணக்கில் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவரது பதிவின் மையக் கருத்தாக உள்ளது. ராகுல் பாலாவின் அனுபவப் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
