சென்னை: ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தனது மகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பெண் அளித்துள்ள புகார் தொடர்பான பழைய ஆவணங்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கல்வி உதவி என்ற பெயரில் சந்திப்பு
இந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவியின் தாயார் சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச் செலவை வீரமணி ஏற்றுக்கொள்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
தனது மகளின் பள்ளிப் படிப்புக்கான செலவை வீரமணி ஏற்றுக்கொண்டதாகவும், பின்னர் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் தாயார் புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாணவி பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அதன் பின்னர் ஏற்பட்ட மன உளைச்சலால் 2014-ம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போதே காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தாயார் கூறியுள்ளார். தற்போது வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது மகளின் மரணம் தொடர்பான உண்மை வெளிவந்து நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தீக்கிரையான காவல் நிலையம்
2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீக்கிரையானது. அப்போது பல்வேறு வழக்குகளின் ஆவணங்கள் மற்றும் கோப்புகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் அசல் ஆவணங்கள் கிடைக்குமா என்பது தற்போது விசாரணையில் முக்கிய அம்சமாகியுள்ளது.
அந்த காலகட்டத்தில் புகார் தொடர்பான பதிவுகள் வேறு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டனவா, வழக்கு பதிவு செய்யப்பட்டதா, விசாரணை நடைபெற்றதா என்பது உள்ளிட்ட விவரங்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்பட்டவை. தற்போதைய போக்சோ வழக்கில் கிடைக்கும் ஆதாரங்களுடன் பழைய புகார் தொடர்பான ஆவணங்களும் ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளன.
