சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட பள்ளியில் காலை உணவில் பல்லி இருப்பதாக புகார் எழுந்து மாணவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் கவனம் பெற்றுள்ளது.
உணவை முதலில் சோதிக்க வேண்டும்
பள்ளியில் சமைக்கப்படும் உணவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன்பு ஆசிரியர்கள் சாப்பிட்டு அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமையலறை தூய்மையாக இருக்க வேண்டும். உணவு சமைக்கும் இடத்தில் சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தவிர பிற பொருட்களை வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பும், பயன்படுத்திய பின்னரும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் சம்பவம்
கடம்பத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவாக வழங்கப்பட்ட உணவில் பல்லி இருப்பதாக புகார் எழுந்தது. உணவு சாப்பிட்ட மாணவர்களில் பலர் தலைசுற்றல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளை தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மாணவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சம்பவத்தையடுத்து சமையலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில், பள்ளிகளில் உணவு பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கு பொறுப்பு
சமைக்கும் போதும், சமைத்த பின்னரும் உணவு பாதுகாப்பாக மூடி வைக்கப்படுகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களுக்கு உணவு வழங்கும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காலை உணவு திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் சுமார் 34.64 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 44,984 பள்ளிகள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
