சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழையுடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகடலோர தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனுடன் இணைந்து கர்நாடக உள்பகுதி முதல் மன்னார் வளைகுடா வரை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி போன்ற அமைப்பு நிலவுவதால் மழைக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த சில நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
