நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நூற்றாண்டு விழாவுக்கு ஏற்பாடு
சிவாஜி கணேசனின் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நடிகர்கள் பிரபு, நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்துவது கடமை என குறிப்பிட்டார்.
சிவாஜி கணேசனின் 99-வது பிறந்தநாள் தற்போது கடைப்பிடிக்கப்படுவதால், அடுத்த ஆண்டு அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும் என அவர் கூறினார்.
வெள்ளித்திரை, சின்னத்திரைக்கு விருதுகள்
நடிகர் பிரபு அளித்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், சிவாஜி கணேசன் பெயரில் விரைவில் விருதுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
இதனால், சிவாஜி கணேசனின் கலைப்பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் விருது வழங்கும் திட்டம் தொடர்பான எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.
