மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக செப்டம்பர் 25-ம் தேதி மதுராந்தகம் தொகுதியில் முதல் கட்ட பிரசாரத்தை விஜய் மேற்கொண்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வாகனத்தில் இருந்தபடி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. மதுராந்தகம் இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
பனையூரில் இருந்து புறப்படும் விஜய், மாமண்டூர், புக்கத்துறை, பழையனூர், படாளம், ஜானகிபுரம், மேலவலம்பேட்டை, கருங்குழி, மதுராந்தகம் புறவழிச்சாலை, மோச்சேரி, மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், எல்.எண்டத்தூர், செம்பூண்டி, பசுவங்கரணை, கீழாமூர், ராமாபுரம், மோகல்வாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக செல்ல உள்ளார்.
மொத்தம் 39 இடங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
