தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் புதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று நவம்பர் 16-ஆம் தேதி டெல்லி செல்கிறார். சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற நினைவுக் குறிப்புகள் அடங்கிய நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விஜய்க்கு சோனியா காந்தி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஜூன் மாதம் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்திருந்தார். தற்போது மீண்டும் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வரும் நிலையில், இரு கட்சிகளின் உறவு எந்த அளவுக்கு வலுப்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்க முயற்சி செய்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் இரு மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் விஜயின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை விஜய் தனியாகச் சந்தித்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை. சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு விழாவைத் தாண்டி, தமிழக அரசியல் கூட்டணிச் சூழலில் இந்தப் பயணம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
