சென்னை: தமிழகத்துக்குச் சேர வேண்டிய ரூ.5,110 கோடி கல்வி நிதியை நிபந்தனையின்றி விரைவாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயில், அதிவேக ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற அரசு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மீனவர் நலன் மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் மூன்றாம் கட்டத் திட்டம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். மேலும், சென்னை-கன்னியாகுமரி மற்றும் சென்னை-கோவை இடையே அதிவேக ரயில் சேவை, திருச்சி-செங்கல்பட்டு ஆறு வழிச்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதுதவிர, கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தைத் தேசியத் திட்டமாகச் செயல்படுத்தவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அங்கீகரிப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கவும் அவர் கேட்டுக்கொண்டார். சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகப் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதும் அவரது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
