உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Outlook, Teams, Copilot உள்ளிட்ட Microsoft 365 சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதிப்பு இரண்டாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், சேவைகளைச் சீரமைக்கும் பணிகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மின்னஞ்சல் அனுப்புவதிலும், பெறுவதிலும் ஏற்பட்ட தாமதங்கள் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், பல பகுதிகளில் சேவைகளின் செயல்பாடு மேம்பட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தப் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. 74 நாடுகளில் பயனர்கள் சேவை முடக்கம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளதாகக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. அலுவலகப் பணிகள், அரசு நிர்வாகம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் மைக்ரோசாப்ட் சேவைகளைச் சார்ந்திருப்பதால் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாதிப்புக்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சைபர் தாக்குதல் காரணமா அல்லது தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. உலகின் முக்கியமான டிஜிட்டல் சேவைகள் சில நிறுவனங்களின் கட்டமைப்பையே அதிகமாகச் சார்ந்திருப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.
