தொழில் தொடங்க விரும்பும் மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் தொழில்முனைவோராக விரும்பும் தகுதியுடையவர்களுக்கு வங்கிக் கடன் உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதே திட்டத்தின் நோக்கமாகும்.
சிறு தொழில் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்க விரும்புவோருக்கு வங்கிக் கடன் கிடைப்பதில் இருக்கும் தடைகளை குறைக்க இந்தத் திட்டம் உதவுகிறது. தொழில் தொடங்குவதற்கான முதலீட்டைத் திரட்ட முடியாதவர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
2026 முதல் 2031 மார்ச் 31 வரை திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தொழில்முனைவோர் உருவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
