மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. பஹ்ரைனில் அமைந்துள்ள ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் அமைப்பைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகளின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பஹ்ரைன் பாதுகாப்புப் படைகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டன. வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வந்த டிரோன்கள் அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது குறிப்பிடத்தக்க சேதமோ ஏற்படவில்லை என பஹ்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தலைநகர் மனாமா பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தலைமையகம் பஹ்ரைனில் செயல்பட்டு வருவதால் இந்தத் தாக்குதல் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பஹ்ரைன் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஏற்கனவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் மேலும் ராணுவ நடவடிக்கைகள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
