மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் சவுதி அரேபியாவை நோக்கி ஏவிய மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவுதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் மற்றும் தலைநகர் ரியாத்தை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார். இடைமறிப்புக்குப் பிறகு சில ஏவுகணைகளின் சிதறல்கள் கீழே விழுந்ததாகவும், அதனால் பொதுமக்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சவுதியின் ஜசான் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணை ஏவுதளத்தையும் ஏமனின் வடக்குப் பகுதியில் அழித்ததாக கூட்டணி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் அவர்களது உட்கட்டமைப்புகளை குறிவைக்கும் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தச் சம்பவம் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கவலையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஏமன் உள்நாட்டுப் போர் மற்றும் பிராந்திய அரசியல் மோதல்கள் நீடித்து வரும் சூழலில், ஏவுகணைத் தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் தடுக்க சர்வதேச நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
