சென்னை: தி.மு.க. அரசு அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பொதுப்பெயர் வகை (Generic) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளன்று ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் சுதந்திர தின உரையில் கூறியிருப்பது வேடிக்கையானது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்ப மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு முதல்வர் மருந்தகம் எனும் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அம்மா உணவகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களின் வரிசையில் அம்மா மருந்தகங்களையும் மூட முயற்சிப்பது தி.மு.க. அரசின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களையும் மூட துடிப்பது மக்கள் நலனுக்கு எதிரான முடிவாகும்.
எனவே, மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை மேம்படுத்துவதோடு, அதன் மூலம் ஏழை, எளிய நடுத்தர குடும்ப மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.