சென்னை: ஸ்ட்ராபெர்ரியில் அதிகமுள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் அழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதிலுள்ள ஃபிளேவினாய்டுகளில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன.
இயற்கை நமக்களித்திருக்கும் மிக அழகிய பழங்களில் ஸ்ட்ராபெர்ரி ஒன்று! சாறு நிறைந்தது, சதை நிறைந்தது, அதன் சிவப்பு நிறமோ கண்ணைக் கவரும். அதைப் பார்க்கும்போதே நாவில் சுவையூறும். ஸ்ட்ராபெர்ரி (ஃபிராகேரியா அனானஸ்ஸா) பழமானது ஐஸ் க்ரீம், பழச்சாறு, மில்க் ஷேக், ஜாம், ஜெல்லி, ஸ்மூதி என பலவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. உங்களுக்கு ஸ்ட்ராபெர்ரி ஏற்கனவே மிகவும் பிடிக்கும் என்றால், அதை நீங்கள் இன்னும் சந்தோஷமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்!
பெர்ரிப் பழங்களில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன. ஸ்ட்ராபெர்ரியிலும் அப்படியே. ஆன்டிஆக்ஸிடண்டுகளுடன், இதில் வைட்டமின் C, ஃபோலேட், பொட்டாசியம், மக்னீசியம், நார்ச்சத்துகள் போன்ற சத்துகளும் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி உடல்நலத்திற்கு ஏகப்பட்ட நன்மைகள் அளிக்கிறது.
வைட்டமின் C அதிகமுள்ளதால், இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட மிகவும் உதவிகரமாக உள்ளது. இதிலுள்ள பாலிஃபீனால்கள் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குவெர்செட்டின் எனும் ஃபிளேவினாய்டு, இயற்கையிலேயே அழற்சி எதிர்ப்புப் பண்புள்ள பொருளாகும்.
இதில் பொட்டாசியம் அதிகமுள்ளது, அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரி குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டது. GI குறைவாக இருப்பதாலும், அதிக நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளதாலும், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதில் அதிகமுள்ள ஆன்டிஆக்ஸிடண்டுகள் அழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதிலுள்ள ஃபிளேவினாய்டுகளில் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளும் உள்ளன. அதிக நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.
நினைவாற்றல் இழப்பையும் தடுக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடண்டுகள் முதுமையடையும் செயலை வேகம் குறைத்து, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகின்றன. இப்போது சருமப் பிரச்சனைகளும், முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இல்லாதவர்களே இல்லை எனலாம்!
இதில் வைட்டமின் C அதிகமுள்ளதால் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. சருமத்தை சுத்தப்படுத்தவும், சருமத்தை பொலிவு பெறச் செய்யவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆல்ஃபா-ஹைட்ராக்சி அமிலம், சருமத்தின் இறந்த செல்களை அப்புறப்படுத்தவும் சருமத்தில் உள்ள நுண்துளைகளை இறுக்கமாக்கவும் உதவுகிறது.