சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ஏற்ற சில சமையல் குறிப்புகள். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும். வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.
தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம். சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.
பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும். ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.