அமராவதி: பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆந்திர மாநிலத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலையை விவரித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது டெல்லியில் உள்ளார். அவர் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாக கூறப்படுகிறது. போலாவரம் அணை திட்டத்திற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கும் என்று கூறியதை அடுத்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் கோடி தலைநகர் அமராவதி மேம்பாட்டு நிதி மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்தங்கிய மாவட்டங்கள்: இதுமட்டுமின்றி ஆந்திராவில் பின்தங்கிய 8 மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி வழங்கும் அறிவிப்பு குறித்தும் பிரதமரிடம் ஆலோசனை நடத்தினார். ஆந்திரப் பிரதேச அரசியல் நிலவரம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் மோசமான ஆட்சி குறித்து பிரதமரிடம் அவர் விளக்கியதாகவும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சந்திரபாபு நாயுடு இன்று அமராவதி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.