அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை, ஆந்திராவில் புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து, சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, அவரது கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திராவில் ஏற்கனவே 7 விமான நிலையங்கள் உள்ளன. இதை, 14 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ராஜமுந்திரி, கடப்பா, விஜயவாடா விமான நிலையங்களில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக எங்கள் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டம் நடந்தது.
இதற்கான பணிகளை விரைவில் தொடங்க அறிவுறுத்தினார். மேலும், குப்பம், ஸ்ரீ காகுளம், தகதார்த்தி மற்றும் நாகார்ஜுனா சாகர் ஆகிய இடங்களில் விமான நிலையத்திற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறையும், மாநில அரசும் இணைந்து முடிவெடுக்கும். விமான நிலையங்களில் பயணிகள் வசதியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புட்டபர்த்தி விமான நிலையத்தை அரசு விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.