புதுடில்லி: “அப்பா, உங்களின் போதனைகள் எனக்கு ஊக்கமளிக்கின்றன. உங்கள் நினைவுகளை என்னுடன் சுமந்து கொண்டு, இந்தியாவுக்கான உங்களின் கனவுகளை நிறைவேற்றுவேன்,” என, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீரபூமிக்கு ராகுல் காந்தி பிறந்தநாளையொட்டி சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லியில் மழை பெய்து கொண்டிருந்த போது, மழையில் நனைந்தபடி பிரார்த்தனை செய்தார். பின்னர், அவர் நினைவிடத்தை வலம் வந்தார்.
அவருடன் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ராவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தனது எக்ஸ் பக்கத்தில் தனது தந்தையைப் பற்றி பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, “அவர் இரக்கமுள்ள ஆளுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்தின் சின்னம்” என்று கூறினார். மேலும், “அப்பா, உங்கள் போதனைகள் எனக்கு உத்வேகம். உங்கள் நினைவுகளை என்னுடன் சுமந்துகொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று ராகுல் காந்தி கூறினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் படத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
“நவீன தொழில்நுட்பத்தையும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் சகாப்தத்தையும் அறிமுகப்படுத்திய தொலைநோக்கு தலைவரான பாரத ரத்னா ராஜீவ் காந்திக்கு இன்று நாம் மரியாதை செலுத்துகிறோம்” என்று ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.
மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் முற்போக்கான இந்தியா ஆகிய அரசியலமைப்பு விழுமியங்களுக்கான அவரது அர்ப்பணிப்பு, வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது,” என்று அது கூறியது.