திருப்பதி: ஆந்திரா மாநிலத்தில் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் படுத்து கிடந்தது.
இதனைக் கண்ட வக்கீல் திம்மப்பா என்பவர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர்கள் மாட்டை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மாட்டை பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்தனர். தற்போது மாடு ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.