சென்னை: வாழை படத்தில் இருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டி கொண்டு இருக்கிறேன் என்று விஜய் சேதுபதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் வாழை படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது:
“மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது. வாழை திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும், அந்த ஊரில், அவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.
வாழை திரைப்படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.