புதுடெல்லி: 2024-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி (62) மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளனர்.
இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஒரு படி கீழே இறங்கியுள்ளார். இரண்டாவது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 10.14 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுருன் இந்தியாவின் நிறுவனர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளரான அனஸ் ரெஹ்மான் ஜுனைத், பட்டியலில் உள்ள அனைத்து தரவரிசைக் கணக்கீடுகளும் ஜூலை 31, 2024 நிலவரப்படி கவனிக்கப்பட்ட செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:-
ஆசியாவின் செல்வத்தை உருவாக்கும் இயந்திரமாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் சீனாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவில் இந்த எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்து 334 பில்லியனர்களாக உள்ளது. அதானி மற்றும் அம்பானிக்கு அடுத்தபடியாக HCL இன் ஷிவ்நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.3.14 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் சைரஸ் எஸ் பூனவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.2.89 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி ரூ.2.49 லட்சம் கோடி சொத்துக்களுடன் ஐந்தாவது இடத்திலும், குமார் மங்கலம் பிர்லா ரூ.2.35 லட்சம் கோடி சொத்துக்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
7-வது இடம் கோபிசந்த் ஹிந்துஜா (ரூ. 1,92,700 கோடி), 8-வது இடம் ராதாகிஷன் தமானி (ரூ. 1,90,900 கோடி), 9-வது இடம் அசீம் பிரேம்ஜி (ரூ. 1,90,700 கோடி), 10-வது இடம் நீரஜ் பஜாஜ் (ரூ. 1,62,800 கோடி) உள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஆறு நபர்கள் தொடர்ந்து தங்கள் இடத்தைப் பிடித்துள்ளனர். இவ்வாறு அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறியுள்ளார்.