தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை, இன்று (ஆகஸ்ட் 30ஆம் தேதி) காலை 8.30 மணியளவில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டது.
மேலும் இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 30) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், பலத்த மேற்பரப்பு காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களிலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மேலும், பலத்த மேற்பரப்பு காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
செப்டம்பர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.