சென்னை: சென்னை மயிலாப்பூரில் ‘தி மைலாப்பூர் இந்து நிரந்தர நிதியம்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி 144 முதலீட்டாளர்கள் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ், இயக்குநர்கள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மோசடி வழக்கில் கைதான 3 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து, அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் நேற்று மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தேவநாதன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அலுவலக கதவுகளை திறந்து லாக்கர்களை திறந்து சோதனை நடத்தினர். இதேபோல், இந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
இன்றும் விசாரணை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தொடர் சோதனையில் 3 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி பொருட்கள், 50-க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.