ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெல், வாழை, மஞ்சள், கரும்பு, மா போன்ற பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு பெய்த மழையால் கிணறுகளில் தண்ணீர் உள்ளதால், நீர்வரத்து உள்ள பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிட்டுள்ளனர்.
கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் மொந்தன், பூவன், ரஸ்தாளி, பச்சை வாழை, சிவப்பு வாழை போன்ற ரகங்களை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்த வாழை மரங்களில் பூக்கள் மற்றும் வாழைப்பழங்கள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது, ஓமலூர் வட்டாரங்களில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றினால் கோட்டமேட்டுப்பட்டி கிராமம் பருப்பு மில் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 250 வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து சேதமடைந்தன.
இதில், வாழைப்பூ மற்றும் வாழை பிஞ்சு, வாழை காய்களுடன் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின.
இதேபோல் சில இடங்களில் வாழை மரங்களுடன் மரங்களும் விழுந்து வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் வேதனையில் உள்ளனர். ஏக்கருக்கு சுமார் ₹1.5 லட்சம் செலவு செய்து சாகுபடி செய்துள்ளனர். அனைத்தும் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் காற்றினால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தோட்டங்களை ஆய்வு செய்து நஷ்டத்தை மதிப்பீடு செய்து வருகின்றனர்.