சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை (செப்டம்பர் 5) வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
சென்னை புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நேற்று செந்தில்பாலாஜி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அதன்பின், அவரது நீதிமன்ற காவலை நாளை (செப்டம்பர் 5) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் சிட்டி யூனியன் வங்கி கரூர் கிளை முதன்மை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார், நீதிபதி அல்லி முன் ஆஜரானார்.
அவரிடம் செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.கௌதமன் குறுக்கு விசாரணை நடத்தினார். நேற்று குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கை நாளை (செப்டம்பர் 5)-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.