சென்னை: தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி, சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் தேசிய கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி கலையரங்கில் நடந்தது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் மிகவும் தொன்மையான மொழி. தமிழில் பேச வேண்டும் என்பது என் ஆசை. எனக்கு தமிழ் படிக்க தெரியும். மற்றவர்கள் தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் தமிழில் பேசுவது மிகவும் கடினம். தொன்மை வாய்ந்த, சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு செல்ல பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழியல் இருக்கை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று, ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்தியாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாத நாடுகள் இப்போது இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையும், பெரும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளன. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தற்போது உலகில் எங்கு பார்த்தாலும் போர் சூழல் நிலவி வருகிறது. ஆனால் இந்தியா எப்போதும் அமைதியான நாடாகவே இருந்து வருகிறது.
ஒருபுறம், உலகின் சில நாடுகளில் அதிகப்படியான செல்வம் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளது. ஆனால், அதே சமயம் சில நாடுகளில் பசியும் பட்டினியும் உள்ளது. இது ஒரு நிலையான உலகமாக இருக்கலாம்.
கரோனா தொற்றுநோய் காலத்தில் உலகிற்கு இலவச தடுப்பூசியை வழங்கிய நாடு இந்தியா. உதவும் தன்மை இந்தியாவின் மரபணுக்களில் உள்ளது. சிலர் சாதி, மதம், மொழியின் பெயரால் இந்திய நாட்டை பிளவுபடுத்த நினைக்கின்றனர். இதுபோன்ற பிரிவினைப் போக்குகளுக்கு மாணவர்கள் ஒருபோதும் பலியாகக் கூடாது.
வாழ்க தமிழ், வாழ்க இந்தி, வாழ்க பாரதம். இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.