சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார்.
மாணிக்கம் தாகூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இத்தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி விஜயபிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், மாணிக்கம் தாக்கூர், வேட்பு மனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு தேர்தல் ஆணையம் மற்றும் மாணிக்கம் தாக்கூர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.