தஞ்சாவூர்: சாலையோரத்தில் வாகனம் மோதி காயங்களுடன் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்சில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்த கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் மூலிகை பண்ணை அருகே ஆர்ச் உள்ளது. இதன் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த வழியாக சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இதனை அந்த வழியாக வந்த நடைபயிற்சி செய்தவர்கள் பார்த்தனர். உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்காவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையர் கண்ணன், துணை ஆணையர் ரமேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் தங்கவேல் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது சாலையோரத்தில் காயங்களுடன் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றி 108 ஆம்புலன்சில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்து உயிருக்கு போராடிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்த ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.