ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் 35 பேரின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோரின் 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் கடந்த 8-ம் தேதி பறிமுதல் செய்து, 35 மீனவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 35 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து 35 மீனவர்களும் இன்று மீண்டும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விமானே விமலரத்ன, 35 மீனவர்களின் நீதிமன்ற காவலை நான்காவது முறையாக செப்டம்பர் 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.